Video Categories

உ.பி.யில் மகா கூட்டணி மண்ணைக் கவ்வியது ஏன்?


மாயாவதிக்கு சொந்த மாநில மக்களிடையேயே செல்வாக்கில்லை. ஆனால், அவருக்கோ இந்தியாவுக்கே பிரதமராக வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. அந்த ஆசையை தூண்டிவிடுவதற்கு வேறு அவருடைய பிரதான எதிரிக்கட்சியின் தலைவரே முன்வந்துவிட்டார். இதைவிட வேறென்ன வேண்டும். தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் சேர்ந்துவிட்டால், வாக்கு சதவிகிதத்திற்கு சொல்லவும் வேண்டுமோ! அப்படி உத்தரப்பிரதேசத்தின் திமுக, அதிமுகவான சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜனும் சேர்ந்தபோது, அது இந்தியாவையே ஆச்சரியப்படுத்தும் மகா கூட்டணியாகவே இருந்தது. பாஜகவை எதிர்க்க இவ்விரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தனர். இடைத்தேர்தல்களில் இந்தக் கூட்டணி வெற்றிபெறவே செய்தது.

ஆனால், எந்தத் தேர்தலுக்காக இந்தக் கூட்டணி ஏற்பட்டதோ, அந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி பாஜகவுக்கு முன்னால் தோல்விமுகம் கண்டிருக்கிறது. காரணங்கள் பல இருக்கலாம்.

பாஜக-வின் உத்தரப்பிரதேச முகமாக யோகி ஆதித்யநாத் இருந்தாலும், அவர் மாநில அரசியலுக்கான முகம்தான். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலோ தேசிய அரசியலுக்கான தேர்தல். அதன் பாஜக முகம் நரேந்திர மோடி. அந்த தேசிய முகத்தை யோகி தலைமையிலான பாஜக உத்தரப்பிரதேசத்தில் முன்னிறுத்தியது. ஆனால், மகா கூட்டணியோ தங்கள் கூட்டணிக்கான பிரதமர் முகமாக மாயாவதியை முன்னிறுத்தியது. மோடி என்ற முகத்திற்கு முன் மாயாவதி என்ற முகம். ஏற்கெனவே பிரதமராக இருக்கும் ஒருவருக்கு எதிராக சொந்த மாநில மக்களாலேயே புறக்கணிக்கப்பட்ட ஒருவர்.

தவறான பிரச்சாரம்!

மோடிக்கு எதிரான வலிமையான தலைவராக மக்கள் தன்னைப் பார்க்கவேண்டும் என்பதற்காக, மாயாவதி மோடியை சீண்டிக்கொண்டே இருந்தார். மோடிக்கு எதிரான அவருடைய விமர்சனங்களில், மனைவியை விட்டுவிட்டவர் என்ற பிரச்சாரம் பெண்களுடைய வாக்குகளை தன் பக்கம் திருப்பும் என்று மாயாவதி நினைத்தார். தன் தவறான நம்பிக்கையின் உச்சமாக, ‘பிரதமரின் பக்கம் தங்கள் கணவர்கள் போனாலே பாஜக அமைச்சர்கள் போனாலே அவர்களுடைய மனைவியர் அஞ்சுவதாகவும், எங்கே மோடி மனைவியை விட்டது போல தங்களையும் தங்கள் கணவர்கள் விட்டுவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுவதாகவும் மிக மோசமான விமர்சனத்தை மாயாவதி மோடிக்கு எதிராக வைத்தார். இது, இவர் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என நினைத்தவர்களையும் மோடிக்கே வாக்களிக்கச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை.  

பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய எத்தனையோ வலுவான நிகழ்வுகள் இருந்தும், மோடியின் தனிப்பட்ட வாழ்வை தொடர்புபடுத்திய மாயாவதியின் கீழ்த்தரமான விமர்சனங்கள் தலைமைப்பண்புக்கு அழகல்ல.

மாயாவதியும் அகிலேஷூம் உண்மையிலேயே பாஜகவின் வெற்றியை விரும்பாதவர்களாக இருந்திருப்பார்களானால், அவர்கள் தங்கள் தனிப்பட்ட ஈகோக்களை எல்லாம் விட்டுவிட்டு, கூட்டணியில் காங்கிரஸிற்கு கணிசமான இடங்களை ஒதுக்கிவிட்டு, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் இணைந்திருக்க வேண்டும். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

மோடியா ராகுலா என்ற வாதத்தை மக்கள் முன்னால் வைத்திருந்தார்களானால், மோடிக்கு எதிரான வாக்குகள் ராகுல் பக்கம் வந்திருக்கும். மாறாக, மோடிக்கு எதிராக தாங்கள் புறக்கணித்த மாயாவதியை மக்கள் முன் வைக்கும்போது, இயல்பாகவே மக்கள் மோடியையே தேர்ந்தெடுத்திருப்பர். அதுதான் உபி-யில் நடந்திருக்கிறது.
தேசிய கட்சியான காங்கிரஸ், என்னதான் உபியில் பலவீனமாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும்போது பிரதமரை தேர்ந்தெடுக்க, அம்மாநில மக்கள் பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸை தேர்ந்தெடுத்திருப்பார்கள். அதேபோல, மாநிலக்கட்சிகள் என்னதான் பலமாக இருந்தாலும், பொதுத்தேர்தல் என்று வரும்போது, பலவீனமான தேசியக் கட்சிகளுக்கு இணையாகிவிட முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.  

Post a Comment

Copyright © NIRUBAN. Designed by OddThemes