Video Categories

7 படங்கள்! 7 ஆண்டுகள்! 1400 கோடிகள்! - வசூல் மன்னனான விஜய்!

தமிழ்த்திரை நடிகர்களில் ரஜினிக்குப் பிறகு ஆயிரம் கோடிகளுக்கு மேலாக வணிகம் செய்த சாதனையாளராக மாறியிருக்கிறார் விஜய். துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார் மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிகில் ஆகிய ஏழு படங்களின் மூலம் விஜய் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.


 2012 தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி தான் விஜயை முதன்முறையாக இந்த 100 கோடி கிளப்பிற்குள் கொண்டுவந்து சேர்த்தது. இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் இளைய தலைமுறை நடிகர்களில் முதல் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த நாயகனாக மாறினார் விஜய்.

அதனைத் தொடர்ந்து, 2014 தீபாவளி பண்டிகைக்கு வெளியான அவரது கத்தி திரைப்படமும் 130 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 2016-இல் வெளியான தெறி 170 கோடிகள் வரை வசூல் செய்து, விஜயின் முதல் 150 கோடி ப்ளஸ் படமானது. 2017-இல் வெளியான பைரவா மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 100 கோடியைக் கடந்தன. அவற்றில் மெர்சல் விஜயின் முதல் 200 கோடி கிளப் படமாக மட்டுமல்லாமல், முதல் 260 கோடி படமாகவும் மாறியது. அடுத்த வருடம் வெளியான சர்கார் திரைப்படமும் இந்த சாதனையை கிட்டத்தட்ட தொட்டு, விஜயின் இரண்டாவது 260 கோடி திரைப்படமாக உருவெடுத்தது.


 இந்நிலையில், இந்த வருட தீபாவளிக்கு வெளியான பிகிலோ, விஜயின் முந்தையை எல்லா சாதனைகளையும் முறியடித்து, அவரது முதல் 300 கோடி படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.


பிகில் 300 கோடி, மெர்சல் மற்றும் சர்கார் இரண்டும் சேர்ந்து 520 கோடிகள், தெறியின் 170 கோடிகள் மற்றும் கத்தியின் 130 கோடிகளையும் சேர்ந்து 300 கோடிகள், துப்பாக்கியின் 180 கோடிகள் மற்றும் பைரவாவின் 113 கோடிகளையும் சேர்த்து 293 கோடிகள், இவை எல்லாவற்றையும் மொத்தமாய்க் கூட்டினால், இந்த 7 படங்களும் 1413 கோடிகளுக்கும் மேலான வணிகத்தைச் செய்திருக்கின்றன. இவற்றில் பிகில் இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


ஆக, துப்பாக்கி வெளியான 2012 நவம்பர் மாதத்திலிருந்து இந்த 2019-இன் நவம்பர் மாதம் வரையிலான 7 வருடங்களுக்குள்ளாக, விஜய் தன் 7 படங்கள் மூலம் 1400 கோடிகளுக்கும் அதிகமான வர்த்தகத்தைச் செய்துள்ளார். விஜய் அறிமுகமான 1992 டிசம்பர் தொடங்கி துப்பாக்கி வெளியான 2012 நவம்பர் வரையிலான, ஏறக்குறைய 20 வருடங்களில் விஜய்க்கு 53 படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்த 53 படங்களின் மொத்த வணிகத்தை எல்லாம் கூட்டினாலும் கூட, அவை 1400 கோடிகளில் பாதியான 700 கோடிகள் என்ற எல்லைகளுக்குள் தான் வரும்.

ஆனால், அதற்குப் பிறகான விஜயின் திரைப்பயணத்தின் விஸ்வரூபமோ, துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டாவாய் இருந்திருக்கிறது. இதன்மூலம் விஜய் அடைந்திருக்கிற மகா வளர்ச்சியையும், அவருடைய திரைப்படங்களின் வணிக எல்லை எந்த அளவுக்கு படத்துக்குப் படம் விரிவடைந்து கொண்டே இருந்திருக்கிறது என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும்.

இந்தப் பட்டியலில் தலைவா, ஜில்லா போன்ற படங்களின் வசூல்களை எல்லாம் சேர்க்கவில்லை. சேர்த்தால் விஜய் 1500 கோடிகள் வணிக எல்லைகளை தாண்டிய, 90-களிலிருந்து துவங்கிய ஒரு கலைமுறையின் சூப்பர் ஸ்டார் என்பது இன்னும் அழுத்தமாகப் புரியும்.

Post a Comment

Copyright © NIRUBAN. Designed by OddThemes