Video Categories

மீண்டும் உயிர்த்தெழுந்த முற்போக்கு சக்திகள்!



நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி, தமிழகத்தில் இருக்கும் முற்போக்கு சக்திகளுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. திமுக மட்டுமல்ல. காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் என மேலும் 5 மதச்சார்பற்ற முற்போக்குக் கட்சிகள் மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளன.

மீண்டும் உயிர்த்தெழுந்த காங்கிரஸ்!

தமிழகத்தைப் பொருத்தவரை, 2014 தேர்தலோடு காங்கிரஸூக்கு கல்லறை கட்டப்பட்டுவிட்டது என்றே பலரும் நினைத்தனர். ஈழ விவகாரத்தால் காங்கிரஸூக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலை அந்த அளவுக்கு உச்சத்தைத் தொட்டது. அதனால் உற்ற தோழனாக இருந்த திமுகவும் காங்கிரஸை கை கழுவும் நிலைக்கு வந்தது. ஆனாலும், தனித்து நின்றும் இரண்டு கட்சிகளும் ஓரிடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதனால் மீண்டும் இரு கட்சிகளும் இணைந்தன.

2016 சட்டசபை தேர்தலில் 43 இடங்களை பெற்ற காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸூக்கு இத்தனை இடங்களை விட்டுக்கொடுத்ததால்தான், திமுக ஆட்சி அமைக்க முடியாமற்போனது என்ற கருத்து திமுகவினர் மத்தியிலும் அரசியல் விமர்சகர்கள் இடையையேயும் எழுந்தது. ஆயினும் இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திருக்கிறது.

2016 சட்டசபை தேர்தலில் கிடைத்த பாடத்தால், ஸ்டாலின் இம்முறை அதிகமான இடங்களை காங்கிரஸூக்குக் கொடுக்கமாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 10 தொகுதிகளை மொத்தமாக அள்ளிக்கொடுத்தபோதே, ஸ்டாலினின் தலைமை மீதே பலருக்கும் சந்தேகம் ஏற்படத்தொடங்கியது. ஆனால், பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ஒரே மனமாய் நின்று தமிழகம் பொழிந்த வாக்கு மழையில் பத்துக்கு ஒன்பது இடங்களில் வெற்றிபெற்று நூற்றுக்கு தொன்னூறு மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸூக்கு எதிராக சீமான் போன்றவர்கள் நிகழ்த்திய பரப்புரைகள் தாண்டி, மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது காங்கிரஸ். 8 எம்.எல்.ஏக்கள், 9 எம்.பி.க்கள் என தமிழகத்தில் மீண்டும் திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக மாறியிருக்கிறது காங்கிரஸ்.     

கம்யூனிஸ்ட்கள்

தேசிய அளவில் கிட்டத்தட்ட முற்றிலும் தேய்ந்து போய்விட்டாலும், தமிழகத்தில் மீண்டும் உயிர்பெற்றிருக்கின்றனர் கம்யூனிஸ்ட்களும். காங்கிரஸூக்காவது 8 எம்.எல்.ஏக்களாவது இருந்தனர். கடந்த சட்டசபை தேர்தலில் தங்களுக்கான கோட்டைகளைக்கூட இழந்தனர் அவர்கள். எப்பொழுதும் ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களையாவது வைத்திருப்பவர்கள், ஒன்றும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். நடந்து முடிந்த தேர்தல் இரண்டு கம்யூனிஸ்ட்களுக்கும் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தலா இரண்டு இடங்களில் போட்டியிட்டவர்கள் இரண்டு இடங்களிலும் வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள். அதிலும் கோவையில் பலமான பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வேறுபாட்டில் வீழ்த்தியிருக்கிறார்கள். இதனால் கம்யூனிஸ்ட்கள் உற்சாகத்திலிருக்கிறார்கள். தமிழகத்தில் 4 இடங்களில் வெற்றிபெற்றுள்ள கம்யூ, கேரளாவில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. மற்ற எல்லா மாநிலங்களிலோ ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்று தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்திருக்கிறார்கள். இதனால், இனி கம்யூனிஸ்ட்களின் அடையாளங்களாக தமிழகத்திலிருந்து வெற்றிபெற்ற இந்த நான்கு பேருமே பெரும்பாலும் இருப்பார்கள். ஒருவகையில், தமிழகத்தின் ஒரு மாநிலக்கட்சியைப் போல் மாறியிருக்கிறது.  

மதிமுக

இறுதியாக 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 2 உறுப்பினர்களை பெற்றது மதிமுக. அதற்குப் பிறகு மத்தியிலும் சரி. மாநிலத்திலும் சரி. 2019 வரையிலான இடைப்பட்ட காலக்கட்டத்தில் அக்கட்சிக்கென ஒரே ஒரு உறுப்பினர்கூட இல்லாத நிலையே இருந்து வந்தது. ஆனாலும் வெற்றி தோல்விகளைத் தாண்டி வைகோ என்ற தலைவரின் செயல்பாடுகளால் அக்கட்சி தொடர்ந்து ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வந்தது. திமுகவுடனான கூட்டணியும், 2019 பொதுத்தேர்தலும், மக்களவையிலும் மாநிலங்களவையிலுமாக இரண்டு உறுப்பினர்களை மதிமுகவிற்கு பெற்றுத்தந்திருக்கிறது. மக்களைவைக்கு உதயசூரியன் சின்னத்தில் நின்ற கணேசமூர்த்தி பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். அதேபோல, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வைகோ மாநிலங்களைவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு செல்லவிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள்

திமுக கூட்டணியில் பல வருடங்களாக அங்கம் வகித்துவந்த விடுதலை சிறுத்தைகள் கருத்து வேறுபாடுகளால் ஒருகட்டத்தில் திமுகவை விட்டுப் பிரிந்தனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணி அமைய திருமாவளவன் மிக முக்கியக் காரணமாக இருந்தார். இந்த மக்கள் நல கூட்டணி திமுகவின் வாக்குகளை பிரித்துவிடவில்லை என்றாலும், திருமாவும் இதர கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும். இதுகுறித்து தேர்தலுக்குப் பிறகான பேட்டிகளிலேயே தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார் திருமா. ஜெயலலிதாவின் மரணம், தேமுதிக, தாமக தவிர்த்த மக்கள் நல கூட்டணி கட்சிகளை திமுகவிடம் கொண்டுவந்து சேர்த்தது. தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில், ஒருங்கிணைந்து செயல்பட்ட இக்கட்சிகள், நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியைப் பெற்றுள்ளன.

சிதம்பரம் தொகுதியில் 2019 தேர்தலுக்கு முன்பாகவே 4 முறை போட்டியிட்டுள்ள திருமா, அதில் ஒரே ஒரு முறை மட்டுமே நாடாளுமன்றத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுவும் 2009 திமுக கூட்டணியில் இடம்பெற்றதாலேயே அவரால் வெற்றிபெற முடிந்தது. மற்ற மூன்று முறையும் அதிக வாக்குகளைப் பெற்றபோதிலும் அவரால் வெற்றிக்கான வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த முறையும் அவர் தனித்து களம் கண்டிருந்தால் முடிவு எதிர்மறையாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், மக்கள் நல கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காமற்போனது, ஜெயலலிதாவின் மரணம், தமிழகத்தில் மோடி மற்றும் எடப்பாடி தலைமையிலான ஆட்சிகளுக்கு எதிராக வளர்ந்துகொண்டே இருக்கும் எதிர்ப்பு மனநிலை, 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் இருந்த சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சித்தேர்தல், இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு திமுகவின் பக்கம் ஒதுங்கினார் திருமா. அவரோடு தேமுதிக, தாமக தவிர்த்த உண்மையான கொள்கை அளவிலான மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகளும் வந்து சேர்ந்தன. தேமுதிகவையும், தாமகவையும் உண்மையான மக்கள் நல கூட்டணி கட்சிகள் என்று சொல்ல முடியாது. ஏனெனில், தங்களை விட செல்வாக்கு படைத்த தலைமை என்ற அடிப்படையில், கூட்டணிக்கு தலைமை ஏற்க

விஜய்காந்த் வரவேற்கப்பட்டார். காங்கிரசின் எதிர்ப்பால் திமுக கூட்டணிக்குள்ளும் நுழைய முடியாமல், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையால் அதிமுகவோடும் இணைந்து செயல்பட முடியாமல் இறுதிக்கட்டத்தில் மக்கள் நல கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்பட்டது தாமக.

ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் பல்வேறு பிரச்சனைகளிலும் திமுகவோடு இணைந்து செயல்பட்ட விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு சீட்களை ஒதுக்கியது திமுக. அந்த இரண்டு சீட்களிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமாரை விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைத்து, அவரது வெற்றியை எளிதாக்கிய திருமா, சிதம்பரம் தொகுதியில் இறுதிக்கட்டத்தில் கிடைத்த பானை சின்னத்தில் போட்டியிட்டார். திமுக கூட்டணியிலேயே மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்றாலும், அவரது வெற்றியை பெரிய அளவில் பலரும் கொண்டாடினர்.

இதன்மூலம், 5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்துவைக்கிறார் திருமா. அவருடன் அவர் கட்சியின் பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிகுமாரும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ரவிகுமாரின் வெற்றி உதயசூரியன் சின்னத்தால் சாத்தியமாயிற்று என்றால், தனிச்சின்னத்தில் போட்டியிட்டாலும் திருமாவின் வெற்றியோ திமுக வாக்குகளால் சாத்தியமாகி இருக்கிறது. ஆம். விழுப்புரமோ சிதம்பரமோ இரண்டு தொகுதிகளிலேயும் திமுக ஆதரவு வாக்குகளெல்லாம் பெரும்பாலும் விசிகவிற்கு கிடைத்திருக்கின்றன. அதனால் தான் இரண்டு பேரின் வெற்றியும் சாத்தியமாகி இருக்கிறது.
இதன்மூலம் தன்னை நம்பி இரண்டரை வருடங்களாகப் பயணித்துவந்த விடுதலை சிறுத்தைகள் வெற்றிவாகை சூட உதவியிருக்கிறார் ஸ்டாலின். ஆதிதமிழர்களின் உரிமைக்காகப் போராடிவரும்

Post a Comment

Copyright © NIRUBAN. Designed by OddThemes