Video Categories

இப்படித்தான் உலகில் அணு ஆயுதங்கள் அறிமுகமாகின!


அணுசக்தி. ஆக்க சக்தியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆல்ஃப்ரெட் நோபல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, மனித இனத்திற்கே அச்சுறுத்தலாய் மாறிய ஓர் அழிவு சக்தி. இந்தச் சக்தியைப் பயன்படுத்தி தான், ஆயுதங்களில் எல்லாம் அதிபயங்கரமானவையான அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டன. இந்த அணுகுண்டுகளையும் விட மூவாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகள், இன்று உலகின் பல நாடுகளிடம் இருக்கின்றன. இவை ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டால், உலகத்தையே ஒரு சில நொடிப்பொழுதுகளில் அழிக்கும் ஆற்றல் கொண்டவை. மீண்டுமொரு உலக யுத்தம் மூண்டால், அது அணு ஆயுத யுத்தமாகவே இருக்குமென்பதும், உலகத்தின் அழிவில் அணு ஆயுத யுத்தங்களுக்கு மிக முக்கியப் பங்கிருக்கப்போகிறது என்பதும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகளின் அறைகூவல் ஆகும். அணுகுண்டுகளால் இனி வரும் உலகத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துகளை விஞ்ஞானிகள் எச்சரித்தது, அணுகுண்டுகளின் பேரழிவை ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் கண்ட பிறகுதான்.

அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்திய இரண்டாம் உலக யுத்தம்


அணுகுண்டு என்றும் ஓர் ஆயுதம் இருக்கிறது என்பதை உலகம் அறிந்துகொண்டதே, இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவில்தான். இந்த யுத்தத்தில் அலைஸ் (ALLIES) மற்றும் ஆக்சிஸ் (AXIS) என்ற பெயர்களில் பத்து நாடுகள் யுத்தக்களம் கண்டன. அலைஸ் எனும் ‘கூட்டாளிகள் அணி’யில் பிரிட்டன், ப்ரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, சீனா மற்றும் பிரிட்டன் இந்தியா (பிரிட்டிஷ் இந்தியா) ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன. ஆக்சிஸ் எனும் அச்சு நாடுகள் அணியில், யுத்தம் துவங்குவதற்குக் காரணமான ஜெர்மனியுடன் இத்தாலி கைக்கோர்த்தது. இதே அணியில், ஏற்கெனவே சீனாவுடன் இரண்டு வருடங்களாக யுத்தம் செய்துகொண்டிருந்த ஜப்பானும் இணைந்தது. 

இருபெரும் சர்வாதிகாரிகள் இறந்த ஏப்ரல் இறுதி!


1939, செப்டம்பர் 1-ஆம் தேதி சிறிய அளவில் துவங்கிய இந்த யுத்தம், அடுத்தடுத்த ஆண்டுகளில், பல நாடுகள் பங்களிப்புடன் உலக யுத்தமாக மாறி, 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்படி, 1945-லும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த வருடத்தின் ஏப்ரல் மாதம், கூட்டாளிகள் அணிக்கும் உலகத்திற்கும் அடுத்தடுத்த நற்செய்திகளை வைத்திருந்தது. அந்த மாதத்தின் 28-ஆம் தேதியில், இத்தாலியின் சர்வாதிகாரி பெனிட்டோ முஸ்ஸோலினி சொந்த நாட்டவர்களாலேயே கொல்லப்பட, 30-ஆம் தேதியில், ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் யுத்தத் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார். ஜெர்மனியும் இத்தாலியும் எவ்வித நிபந்தனையுமில்லாமல் கூட்டாளிகள் அணியிடம் சரணடைந்தன.

சரணடைவை நிராகரித்து யுத்தம் செய்த ஜப்பான்!

ஆக்சிஸ் அணியில் அங்கம் வகித்த மூன்று நாடுகளில், இரண்டு நாடுகளின் இருபெரும் தலைவர்களும் மரணமடைந்து, இரு நாடுகளும் சரணடைந்துவிட்டதால், யுத்தம் கிட்டத்தட்ட முடிவுக்கே வந்துவிட்டது. ஆனால், ஜப்பான் மட்டும் தொடர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டது. ஜீலை மாதம், பிரிட்டன் கூட்டு நாடுகள், ஜப்பானை எவ்வித நிபந்தனையும் இன்றி சரணடைய அழைத்தன. ஜப்பான் அரசு அந்த அழைப்பை நிராகரித்துவிட்டது. 

எதிர்பாராமல் இறங்கிய ’அணு இடிகள்’


அதனைத் தொடர்ந்து வந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி… காலை 8.15 மணிக்கு, அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று, ஜப்பானிய மாநகரமான ஹிரோஷிமா மீது ‘லிட்டில் பாய்’ (LITTLE BOY) எனும் அணுகுண்டை இறக்கியது. உலக வரலாற்றில் முதல் அணு ஆயுதத்தாக்குதல். குண்டு வெடித்த அந்த நொடியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 70-ஆயிரம். தொடர்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 60-ஆயிரம் பேர் வரை இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

ஜப்பான் அலறிக்கொண்டு சரணடையப்போகிறது என நினைத்த எதிரணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் இரண்டு நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 11 மணி அளவில் FAT MAN எனும் புளுட்டோனியம் குண்டு நாகசாகியை நோக்கிப் பாய்ந்தது. உடனடியாக நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை 35-ஆயிரம். தொடர்ந்தும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஆயிரம் வரையாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

Post a Comment

Copyright © NIRUBAN. Designed by OddThemes