ராகுல். மோடிக்கு நிகரான தலைவர் கிடையாது என்ற பரப்புரை பா.ஜ.க.வின்
தலைவர்களாலும், தொழில்நுட்பப் பிரிவாலும், தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும், மோடிக்கு
எதிரான தலைவராக ராகுல் மக்கள் மனங்களில் பதியப்பட்டுவிட்டார் என்பதே உண்மை.
தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணி வெற்றிபெற்றால் ராகுல் தான் பிரதமர்
என்று அழுத்தந்திருத்தமாக முன்னறிவித்து, தேர்தலை சந்தித்த திமுக கூட்டணிக்கு கிடைத்த
மாபெரும் வெற்றியை உற்றுநோக்க வேண்டியதிருக்கிறது. தமிழ்நாட்டு வாக்காளர்கள், மோடி
வரக்கூடாது என்று வாக்களித்தார்கள் என்றால், மோடிக்கு மாற்றாக ராகுல் வரவேண்டும் என்று
வாக்களித்தார்கள் என்பதுதான் உண்மை.
ஒரு சத்தமில்லாத ராகுல் ஆதரவு அலை தமிழ்நாட்டில் வீசியிருப்பதைத்தான்
தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. தேர்தலுக்கு முன்பாக யு டியூப் சேனல் ஒன்று தமிழ்நாடு
முழுவதும் நிகழ்த்திய கருத்துக்கணிப்பு ஒன்றிலும் பெரும்பான்மை மக்கள் ராகுல் வரவேண்டும்
என்று சொன்னதை ஆச்சரியத்தோடு பார்க்க முடிந்தது. அது தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்திருக்கிறதை
காண முடிகிறது.
ஆம். தமிழகம் தனக்கான பிரதமராக ராகுலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறது.
தமிழகத்தில் மோடிக்கு எதிராக இருக்கும் எதிர்ப்பலையை மிகச்சரியாக அறுவடை செய்யும் வகையில்,
ஸ்டாலின் திட்டங்களை வகுத்தார்.
ஆனால், மற்ற மாநிலங்களிலும் மோடிக்கு எதிரான எதிர்ப்புகள் இருந்தது என்றாலும், அதனை மிகச்சரியான முறையில் அறுவடை செய்ய மற்ற மாநிலத்தவர்கள் தவறி விட்டார்கள்.
ஆந்திராவில்!
சந்திரபாபு நாயுடுவுக்கு மாற்றாக
ஜெகனை தங்கள் முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர் சீமாந்திரா மக்கள். இந்த முடிவு கிட்டத்தட்ட
ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், மக்களவைக்கும் ஜெகன் மோகன் கட்சியைத்தான்
தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற அவசியம் அவர்களுக்கு இல்லை.
காங்கிரஸூம் தெலுங்கு தேசமும்
கூட்டணி வைத்து, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி அங்கே மக்களைவை தேர்தலை
சந்தித்திருந்தால், இத்தனை பெரிய வெற்றி ஜெகன் மோகனுக்குக் கிடைத்திருக்காது.
சந்திரபாபு கூட்டணி வைத்துப்
போட்டியிடாவிட்டாலும், அவர் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறார் என்பதை அழுத்தமாக
நாடு முழுவதும் இருக்கும் மக்கள் மனங்களில் பதிய வைத்துவிட்டார். பிறகு முழுக்க நனைந்த
பிறகு முக்காடு போட்ட கதையாக, இவ்விரு கட்சிகளும் ஆந்திரத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்ததால் இருக்கும் எதிர்ப்பு எங்கே தங்களைச் சாய்த்துவிடுமோ
என இரு கட்சிகளும் அஞ்சினார்கள்.
உண்மையில், ஆந்திராவை இரண்டாகப்
பிரித்ததால், காங்கிரஸ் மீது ஆந்திர மக்களுக்குக் கோபம் இருக்குமானால், அது பிஜேபிக்குத்தான்
வாக்குகளாக மாறி இருக்க வேண்டும். ஆனால், அங்கே பிஜேபி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவே
இல்லை. ஆக, அவர்கள் மோடியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மோடிக்கு மாற்றாக, ராகுல் காந்தியும்
அங்கே காங்கிரஸால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. சந்திரபாபு நாயுடுவாலும்
முன்னிறுத்தப்படவில்லை.




Post a Comment