Video Categories

பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் பெரும்பிழை செய்த காங்கிரஸ்!


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிர்ச்சித் தோல்விக்கு, ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக நிறுத்தாததும் முக்கியக் காரணம்.
எதிரில் பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக மோடி போன்ற ஒருவர் நிற்கும்போது, தங்கள் பிரதமர் வேட்பாளர் யாரென்றே அறிவிக்காமல் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது என்பது மிக தவறான முடிவு. மோடிக்கு மாற்று யார் என்ற கேள்விக்கு காங்கிரஸ் பதில் தராமல் இருந்திருக்கக்கூடாது.

உறுதியாக தாங்கள் வெற்றிபெறுவோம் என்பதை காங்கிரஸ் நம்பியிருந்தது உண்மை ஆனால், தன் நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, அக்கட்சி காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுலே பிரதமர் அல்லது இவர்தான் பிரதமர் என்று உறுதியாக அறிவித்திருக்க வேண்டும். தேர்தல் அரசியலில் வெற்றி தோல்விகள் என்பவை யதார்த்தமானவை. வெற்றியோ தோல்வியோ முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம. ஆனால், நம்முடைய முயற்சி என்பது எப்பொழுதும் முழுமையானதாகவும் அழுத்தமானதாகவும் இருக்க வேண்டும்.

காங்கிரஸே ராகுலை அங்கீகரிக்காதது மிகவும் மோசமான செயல்.

மற்ற கட்சிகளை நம்பி மோசம்!

பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்தால், உத்தரப்பிரதேசத்திலிருந்து மாயாவதி கோபித்துக்கொள்வார், அகிலேஷ் கோபித்துக்கொள்வார், மேற்கு வங்கத்திலிருந்து மம்தா கோபித்துக்கொள்வார்… என மற்றவர்களுக்காக பயந்தே காங்கிரஸ் கோட்டை விட்டுவிட்டது.

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், நாங்கள் உங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம் என்று ஒருவேளை இந்தக் கட்சிகள் அறிவித்திருந்தால், மோடிக்கு எதிரான ஒரு மெகா கூட்டணிக்காக காங்கிரஸ் ராகுலை தியாகம் செய்திருக்கலாம். ஆனால், இந்தக் கட்சிகள் காங்கிரஸோடு கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. காங்கிரஸை புறக்கணித்தன. ஆனால், அதேநேரத்தில், காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவதையும் தடுத்துவிட்டன.

எல்லோரும் தனித்து நின்று தேர்தலை சந்திப்போம். பின்பு ஒன்றுகூடி பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம். பிரதமரை தேர்ந்தெடுப்போம் என்ற ரகசிய உடன்பாடு இருக்குமானால், அவரவர்களின் கட்சி அவரவர்களுடைய தலைவர்களைத்தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கின்றன என்றுதானே அர்த்தம். மகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை அகிலேஷ் முன்மொழிய வில்லையா? மம்தா மோடியை எதிர்க்கும் சரியான சக்தியாக மறைமுகமாக தன்னை முன்னிறுத்தவில்லையா? மேற்கு வங்க முதல்வராக இருப்பதால், வெற்றிபெற்றால் தான் தான் பிரதமர் என்பதை அறிவித்துக்கொள்வதில் மம்தாவுக்கு வேண்டுமானால், தயக்கங்களும் தடைகளும் இருந்திருக்கலாம்.

ஆனால், தேசிய கட்சியான காங்கிரஸூக்கு அந்தத் தடைகள் எதுவும் இல்லையே! தனித்து நிற்பது என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிறகு, தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் காங்கிரஸ் தயங்கியிருக்கக்கூடாது.

எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போயிருந்தால்தான், கணிசமான இடங்களில் வெற்றிபெற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம், ஒன்றுகூடி ராகுல் காந்தியையோ அல்லது தங்களுக்குள் பொதுவான ஒருவரையோ பிரதமராகத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
ஆனால், பிரதமர் வேட்பாளரையே காங்கிரஸ் அறிவிக்காதது, தாங்கள் அறுதிப் பெரும்பான்மை பெறமாட்டோம் என்று ஒப்புக்கொண்டதுபோல் தானே இருக்கிறது. நிச்சயம் தொங்கு பாராளுமன்றம்தான். அதற்கேற்ப எல்லாக் கட்சிகளும் ஒன்றுபடுவதற்கு இப்பொழுதே இறங்கிப் போகவேண்டுமென்று காங்கிரஸ் செயல்பட்டுவிட்டது.

Post a Comment

Copyright © NIRUBAN. Designed by OddThemes