Video Categories

’ரீமேக் சூப்பர்ஸ்டார்’ ரஜினி...

’ரீமேக்’ என்ற வார்த்தைகளைக் கேட்டாலே, இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு தளபதி விஜய்யும் ஜெயம் ரவியும் தான் பொதுவாக நினைவுக்கு வருகிறார்கள். அதிலும் விஜயின் பல திருப்புமுனை திரைப்படங்கள், பிறமொழி படங்களிலிருந்தே பிறந்தன என்பதால், அவர் மீது ரீமேக் விமர்சனத்தைக் கடுமையாக வைத்து வருகிறார்கள்.

தமிழ்த்திரையுலக வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், ரீமேக் என்றால் முதலாவது நினைவுக்கு வரவேண்டியது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், இரண்டாவது நினைவுக்கு வரவேண்டியது சூப்பர் ஸ்டார் ரஜினியுமே.

எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற படங்களில் எங்க வீட்டுப்பிள்ளை மறக்க முடியாத படம். இப்படம், ’ராமுடு பீமுடு’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். ஆந்திராவின் எம்.ஜி.ஆரான என்.டி.ஆர். நடித்த இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்தின் என்.டி.ஆரான எம்.ஜி.ஆர். இப்படத்தில் நடித்தார். இங்கும் அக்கதை மாபெரும் வெற்றிபெற்றது. எம்.ஜி.ஆரின் இரட்டைவேட நடிப்பு, நான் ஆணையிட்டால் போன்ற மறக்கமுடியாத பாடல்கள், நகைச்சுவை, திரைக்கதை என பலவிதத்திலும் எங்க வீட்டுப்பிள்ளை தமிழ்த்திரையுலகில் மிக முக்கிய இடத்தைப் பிடித்தது.

எங்க வீட்டுப்பிள்ளை மட்டுமில்லை. எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு, நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல், மாட்டுக்கார வேலன், நாளை நமதே போன்ற படங்களும் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலிருந்து புறப்பட்டு வந்தவை தான். ஆனாலும், எதுவும் எங்க வீட்டுப்பிள்ளை அளவுக்கு வெற்றிகாணவில்லை என்பதுதான் உண்மை.

பலவிதங்களிலும், தமிழின் பொழுதுபோக்குப் படங்களுக்குப் புதுப்பாதை போட்டுத்தந்த எம்.ஜி.ஆர். பிறமொழியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்து வெற்றி காண்பதிலும் தனக்குப் பின்னால் வந்த நாயகர்களுக்கு புதுப்பாதை அமைத்துத் தந்துவிட்டுச் சென்றார். அந்தப் பாதையில், அவருக்கு அடுத்த தலைமுறையில், வெற்றிகரமாகப் பயணம் செய்தார் ரஜினிகாந்த். இன்னும் சொல்லப்போனால், எம்.ஜி.ஆரையும் தாண்டி, மிக அதிக ரீமேக் படங்களில் நடித்தார் ரஜினி. அவரது வெற்றிப்பயணமே கொஞ்சம் குறைய முழுமையாக ரீமேக் படங்களிலேயே கட்டி எழுப்பப்பட்டிருப்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்.   

இவை மட்டுமில்லை. எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த படங்களில் சரிபாதி படங்கள் மறு உருவாக்கத்தைச் சார்ந்தவை என்பது திரைப்பட விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. சரி. எம்.ஜி.ஆர். போட்ட இந்தப் பாதையில் பயணம் போன இரு நாயகர்களுக்கு வெற்றி கிடைத்ததா என்ற கேள்வியுடன் இந்தக் கட்டுரைக்குள் பயணம் மேற்கொள்வோம்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழ்த்திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த நாயகன். இவரது கலையுலகப் பயணத்தில் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் பஞ்சமே இல்லை எனலாம். ஆனால், அவற்றில் பெரும்பான்மை பிற மொழியிலிருந்தே புறப்பட்டு வந்திருப்பது ஆச்சரியம். ரீமேக் எனப்படும் மறு உருவாக்கப் படங்களால் தன் கலையுலகப் பயணத்தில் உச்சம் தொட்ட இந்த நட்சத்திரத்தின் பெயரை சிறு குழந்தையும் சொல்லும்.

டான் பில்லா பில்லா ஆனது!

பில்லா. கமர்ஷியல் கதாநாயகனாக ரஜினியின் முதல் சூப்பர் ஹிட். ரசிகர்களை அதிரவைத்த அமிதாப்பின் டான் திரைப்படத்தின் தழுவல் இது.

தீவார் தீ ஆனது!

பில்லாவைத் தொடர்ந்து, அமிதாப்பின் தீவாரும் தமிழில் ரஜினி நடிப்பில் பரபரக்கும் தீ ஆனது.

தில்லுமுல்லு

கோல்மால் படங்களுக்கு வட இந்தியாவில் வரவேற்பு அதிகம். கோல்மால் படத்தின் முதல் பாகத்தைத் தழுவித்தான், தன் சிஷ்யனுக்கு புகழ்பெற்ற தில்லுமுல்லு தந்தார் கே.பாலசந்தர். ஹிந்தியில் ஹிட் அடித்ததோடு தமிழிலும் அது ஹிட்.

நான் சிகப்பு மனிதன்

ரஜினி பகல் பொழுதுகளில் கண்ணியமான பேராசிரியர் விஜயாகவும், கடும் கோபக்காரராக இரவுகளில் ராபின்ஹூட்டாகவும் வலம்வந்த படம் நான் சிகப்பு மனிதன். இது ராஜ்பாப்பர் நடித்த ஆஜ் கி ஆவாஸ் என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக்.

தொடர்ந்தும் அமிதாப் படங்கள்

பில்லா தந்த வெற்றியினால் தனக்குப் பொருந்திய அமிதாப்பின் மற்ற வெற்றிப்படங்களின் ரீமேக்கில் நடிக்கத்தொடங்கினார் ரஜினி. அமிதாப்பின் ப்ளாக்பஸ்டர் த்ரிசூல் மிஸ்டர் பாரத்தாகவும் குத்தார் படிக்காதவனாகவும், பொன்விழா கொண்டாடிய நாமக்லால் வேலைக்காரனாகவும் கஸ்மி வாடே தர்மத்தின் தலைவனாகவும் தமிழுக்கு மொழிமாறி ரஜினிக்கு வெற்றி தந்தன.

இந்த வரிசையில், அமிதாப்பின் 198 சூப்பர் ஹிட் லாவாரிஸ். அமிதாப் டூ ரஜினி ரீமேக் பட்டியல் படங்களில் இந்தப் படம் பணக்காரன் ஆனது.

மாவீரன்

ஆனால், அமிதாப்பின் எல்லாப் படங்களுமே ரஜினி நடிப்பில் வெற்றிபெற்று விட வில்லை. உதாரணமாக, சுதந்திரப்போராட்ட கால சம்பவங்களையும், சினிமா மசாலாக்களையும் கலந்து உருவான அமிதாப்பின் மர்த் ரஜினியின் தயாரிப்பில் மாவீரன் ஆனபோது வெற்றிபெறவில்லை.

சிவா

அதேபோல, அமிதாப்பின் கூன் பசினாவைத் தழுவிய சிவாவும் ரஜினி ரசிகர்களைக் கவரவில்லை.

பாலிவுட்டின் கமர்ஷியைல் சினிமாக்களின் வீச்சு, வேறொரு பரிமாணத்தை எட்டியதொரு காலக்கட்டத்தில் தான், ஹிந்தி திரையுலகில் அமிதாப்பின் ஆதிக்கமும் அதிகரிக்கத் தொடங்கி இருந்தது. அவரது திருப்புமுனை படங்களை சரியான நேரத்தில் மறு உருவாக்கம் செய்து நடித்தது, ரஜினியின் மார்க்கெட் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியது. முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும், இதில் ரஜினிக்கு உறுதுணையாக இருந்தன. ரீமேக் படங்களில் மற்றொரு நடிகர் நடித்த கதாபாத்திரத்தை, தான் ஏற்றாலும், அவர்களை விட ஒருமடங்காவது சிறப்பாக நடித்துக் காட்டிவிட வேண்டுமென்கிற வேகமும், முனைப்பும் ரஜினிக்கு அதிகமாகவே இருந்ததும், ரஜினி படங்களின் வெற்றிக்கு ஒரு காரணம்.

தென்னக மொழிகளின் மீது திரும்பிய பார்வை

இந்நிலையில், ஹிந்தி ரீமேக் படங்களிலேயே அதிகம் நடித்துக்கொண்டிருந்த அவரது பார்வை, ஒருகட்டத்தில் சூப்பர் ஹிட்டான தென்னக மொழிப்படங்களின் மீதும் திரும்பியது.

ஆந்திர மாப்பிள்ளை

சிரஞ்சீவி நடிப்பில், 1989-இல் தெலுங்கு வருடப் பிறப்புக்கு வெளியாகி, அதுவரையிலான தெலுக்கு சினிமா வசூல் சாதனைகளை முறியடித்த படம் அத்தக்கு எமுடு அம்மாயிக்கு மொகுடு. அந்தப் படம் அதே வருட தீபாவளி திருநாளுக்கு தமிழில் மாப்பிள்ளையாக மாறி வெற்றிபெற்றது. தனது திரைப்பட கல்லூரி சீனியர் ரஜினிக்காக இப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் வந்தார் சிரஞ்சீவி.

அதிசயப்பிறவி

1941-இல் ஹாலிவுட்டில் வெளியானது ஹியர் கம்ஸ் மிஸ்டர் ஜோர்டான் என்ற திரைப்படம். அதன் கதையைத் தழுவி, 1968-இல் ஜக்கையா ஆஸ்மன் என்று ஹிந்தியில் ஒரு படம் வெளியானது. அதன் கதையைத் தழுவி, 1988-இல் டோலிவுட்டில் லிமுடிக்கி மொகுடு உருவானது. அந்தப் படம்தான் 1990-இல் ரஜினி நடிப்பில் அதிசயப்பிறவி ஆனது.

அண்ணாமலை

50 வருடப் பயணத்தில் ஹாலிவுட்டில் இருந்து, கோலிவுட்டை அடைந்த அதிசயப்பிறவி, எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும், அதேபோன்றதொரு பயணம் மேற்கொண்டு வந்த இன்னொரு கதை, ரஜினிக்கு மாபெரும் இன்னொரு வெற்றியைத் தேடித்தந்தது. அந்தப் படம், ப்ராண சிநேகிதலு என்ற தெலுங்கு படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்த தெலுங்கு படமோ, ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை, ராகேஷ் ரோஷன் இயக்கிய குத்கர்ஸ் படத்தைத் தழுவி உருவானது. குத்கர்ஸோ காயின் அண்ட் ஆபெல் என்ற ஆங்கிலப் புதினத்தைத் தழுவி படமானது. சரி. ஆங்கிலத்தில் ஆபெலாகப் புறப்பட்டவர், தமிழுக்கு வரும்போது என்னவாக மாறினார்?

1992-இல் வெளியாகி தமிழ் திரையுலகின் அதுவரையிலான வசூல் வரலாறுகளை எல்லாம் மாற்றி அமைத்தது ரஜினியின் அண்ணாமலை. நடை, உடை, பாவனைகளிலும், அனல் பறக்கும் வசனங்களிலும் உத்வேகமான இசையுடனும் ரஜினி வெளிப்படுத்தப்பட்ட விதம், ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்தது. அவரது படங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களின் மனங்களில் பல மடங்கு உயர்த்தியது.

கன்னடத்திலிருந்தும் கதைகள் இறக்குமதி!

ரஜினியின் மறு உருவாக்கப் படங்களின் பட்டியலில், ஹிந்தி, தெலுங்கு படங்களுக்கு மட்டும்தான் இடமா அல்லது வேறு மொழிப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றனவா?  

அமிதாப்பை தொடர்ந்து ராஜ்குமாரும்!

ஹிந்தி, தெலுங்கு மொழிப் படங்களுக்கும் மட்டுமில்லை. ரஜினியின் மறு உருவாக்கப் பட்டியலில், கன்னடப் படங்களுக்கும் இடமுண்டு. ராஜ்குமாரின் பிரேமதே கனிகேவை மறு உருவாக்கிய பொல்லாதவன் அதில் முதலிடம் பிடித்தது.

தொடர்ந்து ராஜ்குமாரின் நா நின்ன மரியலாரே புதுக்கவிதையாகவும், அனு ஆகா அரளித்து மன்னனாகவும் உருவாக்கம் கண்டன.

பாண்டியன்

பாம்பே தாதா பாண்டியன் ஆனது. கன்னடத்தில் அந்தப் படத்தை இயக்கி நடித்த டைகர் பிரபாகரே பாண்டியனுக்கு வில்லன் ஆனார்.

சந்திரமுகி

அப்படித்தான் ’தேவா’வை தழுவி தர்மதுரையும், ’ஆப்த மித்ரா’வைத் தழுவி சந்திரமுகியும் உருவாகின. பாசில் இயக்கிய மணிச்சித்ரதாழ் மலையாளப் படத்தின் ரீமேக் தான் ஆப்த மித்ரா என்றாலும், ரஜினி அதை தமிழில் மாற்றுவதற்கு கன்னட ஆப்த மித்ராவின் அதிரடி வெற்றியே காரணமானது. மலையாளத்தில் மணிச்சித்ரதாழாக வெளியானபோதும், கன்னடத்தில் ஆப்த மித்ராவாக வெளியானபோதும், வசூல் வரலாறு படைத்த கதை, தமிழில் சந்திரமுகி ஆனபோதும் வசூல் வரலாற்றை மீண்டும் படைத்தது.

தாங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்த கதைகளில் வேறொரு சூழ்நிலையில், நாயகனாக நடிக்கும் வாய்ப்பு எல்லா நாயகர்களுக்கும் கிடைப்பதில்லை. ஆனால், ரஜினிக்குக் கிடைத்தது. எப்படி? எப்போது? எந்த வடிவில்?

கை கொடுக்கும் கை

அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினி, அடுத்து கன்னடத்தில் கதா சங்கமாவில் நடித்தார். மூன்று பெண்கள் பற்றிய மூன்று கதைகளைப் பேசிய கதா சங்கமாவில் பார்வையற்ற பெண் முனிதாயியை பலாத்காரம் செய்யும் போக்கிரியாக நடித்திருந்தார் அவர். அந்தப் போக்கிரி வேடத்தின் சாயல், பிற்பாடு அப்படத்தின் இளம் இயக்குநர் பாரதிராஜாவின் 16 வயதினிலேவின் பரட்டை பாத்திரத்திலும் எதிரொலித்திருந்தது. கதா சங்கமாவின் அந்தக் கிளைக்கதை, மகேந்திரனின் இயக்கத்தில் எட்டு வருடங்கள் கழித்து, கைகொடுக்கும் கை ஆனது. அதிரடி நாயகனாக ரஜினி அமர்க்களம் செய்து கொண்டிருந்த காலத்தில், அழகியல் கலந்த மென்மையாக வெளிவந்தது கை கொடுக்கும் கை. ஆனால் அதன் இறுதிக்காட்சியை ரஜினி ரசிகர்கள் ஏற்காததால், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

பாட்ஷா

ஹம். அமிதாப்பின் 1991-ஆவது வருட ஹிட். அவரது தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார் ரஜினி. அத்திரைப்படத்தின் அடிப்படை கதையையும், சில காட்சிகளையும் மட்டும் எடுத்துக்கொண்டு, கதைக்களம், கதாபாத்திரங்கள், கதை நகர்வு என எல்லாவற்றிலும் மாற்றம் செய்து, ரஜினியின் பாட்ஷா வெளிவந்தது.

1995-இல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வந்த பாட்ஷா, அதே சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992-ல் வெளிவந்த அண்ணாமலை போட்டுவைத்த வசூல் கோட்டை தாண்டி ரஜினியை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றது. அமிதாப் படங்களை மறு உருவாக்கம் செய்து ரஜினி நடித்த படங்களில், பாட்ஷா இந்திய சினிமா கண்ட சிறந்த பொழுதுபோக்குப் படங்களுள் ஒன்றாக அமைந்தது. இப்படத்திற்கான ரீமேக் உரிமையை சத்யா மூவிஸ் மூலம் வாங்கியது முதல், இயக்குநரை தேர்வு செய்து, பாட்ஷா பாத்திரத்தை பவர்ஃபுல் பஞ்ச் வசனங்களால் செதுக்கியது வரை, பலதரப்பட்ட ரீமேக் படங்கள் மூலம் தான் பெற்ற சினிமா ஞானத்தை பக்குவத்துடன் வெளிப்படுத்தினார் ரஜினி.

ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலிருந்து ரஜினியை நோக்கிப் புறப்பட்டு வந்த கதைகள் ரஜினியின் கலையுலக வாழ்க்கையை படிப்படியாக உயர்த்தின. இந்நிலையில், இந்திய சினிமாவின் யதார்த்த களமாகக் கருதப்படும் மலையாள சினிமாவிலிருந்தும், சில திரைப்படங்கள் ரஜினியை நோக்கி வந்தன. அந்த படங்கள், மாஸ் ஹீரோவான ரஜினியிடம் எப்படி உருமாறின? என்ன பலன் தந்தன?

மலையாளக்கரையோரமும்!

முத்து

ஜப்பானில் ரஜினி படங்களுக்கான வணிக வாசலை திறந்துவைத்த படம் முத்து. தேன்மாவின் கொம்பத் என்ற மலையாளப் படத்தின் தழுவல். கர்தும்பி என்ற பெண்ணை முன்னிட்டு, ஸ்ரீகிருஷ்ணன் என்ற முதலாளிக்கும், மாணிக்கேயன் என்ற பணியாளனுக்கும் இடையில் ஏற்படும் மோதல் எப்படி நிறைவுபெறுகிறது என்பதே தேன்மாவின் கொம்பத்தின் கதை. அப்படத்தின் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு, இரண்டாம் பாதியை ரஜினியின் மாஸ் பிம்பத்திற்கு ஏற்றவாறான ப்ளாஷ்பேக் கதையுடன் மாற்றி அமைத்தார் கே.எஸ்.ரவிகுமார்.

குசேலன்

பேருந்து நடத்துநராக பெங்களூரு நகரத்தில் பணிபுரிந்து வந்த சிவாஜிராவை சென்னை திரைப்படக் கல்லூரி வரை நடத்தினார் ராஜ்பகதூர் என்ற அவரது நண்பர். அங்கிருந்துதான் ரஜினியின் கலையுலகப் பயணம் துவங்கியது. இதனைப் போன்ற கதையம்சத்துடன் வெளிவந்து வெற்றி கண்டது மலையாள கத பறயும் போல். அதுவே தமிழில் குசேலன்.

ரஜினியின் 150க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் அரை சதம் படங்கள், பிறமொழி படங்களை தழுவியவை. இன்னும் அரை சதம் படங்களோ அவர் நேரடியாக பிறமொழிப் படங்களில் நடித்தவை. அதில் சில படங்கள் அவர் கதாநாயகனாக நடித்தவை. அவற்றில் வெற்றிபெற்ற ஜான் ஜானி ஜனார்த்தன், மூன்று முகம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக். விஜய்காந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறையின் ரீமேக் தான் ஹிந்தி அந்தாகானூன் என்பதும், குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Copyright © NIRUBAN. Designed by OddThemes