வசூல் சாதனைகள்
தன் திரைவாழ்க்கையின் மிக முக்கிய உச்சத்திற்கு உயர்ந்துகொண்டிருக்கிறார் விஜய். துப்பாக்கியில் தொடங்கிய அவரது வசூல் சாதனைகள் கத்தி, தெறி, மெர்சல், சர்கார், பிகில் என படத்துக்குப் படம் உயர்ந்துகொண்டே போய்க்கொண்டே இருக்கிறது. தற்போதையை மாஸ்டர் படமும் ஜனவரியிலேயே 200 கோடி வியாபாரத்தை முடித்திருக்கிறது. அந்தப் படமும் பிகிலின் வசூலை எல்லாம் தாண்டி உச்சத்தைத் தொடக்கூடிய நிலையில்தான் இருக்கிறது.
விஜயைப் பொருத்தவரை
அவருடைய மிக முக்கியமான போட்டியாளர் ரஜினிதான். அவருடைய படங்களே விஜய் படங்களுக்கு
அடுத்தபடியாகத்தான் பாக்ஸ் ஆபிசில் இருக்கின்றன. வெகு விரைவிலேயே ரஜினி அரசியலுக்குக்
கடந்துபோகும் நிலையில், அவருடைய சூப்பர் ஸ்டார் என்ற அரியணையில், விஜய் அமரப்போகிறார்.
ரஜினி சினிமாவில் அறிமுகமான 75-ஆம் வருடத்தோடு கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரின் திரைப்பயணமே முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. அவர் முழுநேர அரசியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார். அன்றைய சூப்பர் ஸ்டாரான எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட தன் சினிமா பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில்தான் ரஜினியின் சினிமா பயணமே தொடங்குகிறது.
அதிலும் ரஜினி கதாநாயகனாக உயர்ந்த
பைரவி வெளியான சமயத்தில் எல்லாம் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வராகவே மாறிவிட்டார்.
அதனால், அதே எம்.ஜி.ஆரின் பொழுதுபோக்குப் பட பாணியை உறுதியாகப் பிடித்துக்கொண்டு ரஜினி,
தன் சக போட்டியாளர்களான கமல்ஹாசன், விஜய்காந்த் போன்றவர்களை எல்லாம் எளிதாக வெற்றிகொண்டு
சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்.
ஆனால், விஜய்க்கு அப்படியில்லை. அவர் நடிக்க வந்தே 28 வருடங்களாகியும்,
ரஜினி இன்னும் நடித்துக்கொண்டே இருக்கிறார். ரஜினிக்கு முன்பே விஜயின் கில்லி படம்,
தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி வசூல் என்ற சாதனையை நிகழ்த்திவிட்டாலும், ரஜினி ஷங்கருடன்
கூட்டணி அமைத்துக்கொண்டு சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 என்ற புதிய வசூல் சாதனை எல்லைகளைத்
தொட்டுக்கொண்டே இருந்தார்.
ஒருவழியாக இந்த வருடத்தோடு ரஜினி சினிமாவை விட்டுப்போவார் என்ற நிலை வந்திருக்கிறது. இந்த நிலையில், ரஜினியின் பேட்ட, தர்பார் படங்களால் விஜயின் கடைசி மூன்று படங்களான மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்களின் வசூல் எல்லைகளை தொட முடியவில்லை. இருநூறு கோடிகளுக்கும் சற்று அதிகமான வசூலையே அவை ஈட்டியிருக்கின்றன.
ஆக, ரஜினி இன்னும்
துறையை விட்டு விடைபெறுவதற்கு முன்பாகவே, விஜய் கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்.
ஆனாலும், மூத்தவரை மரியாதையாக மனம் கோணாமல் வழியனுப்ப வேண்டும் என்ற பாணியில்தான் அவர்
தான் என்றும் சூப்பர் ஸ்டார் போன்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
கடுமையானப் போராட்டத்திற்குப் பிறகு தனக்குக் கிடைத்திருக்கிற
சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இன்னும் சில வருடங்களாவது விஜய் அனுபவிக்கவே நினைப்பார். எல்லாம்
தனக்கு அநுகூலமாகக் கூடிவருகிற இந்த நேரத்தில் முழுநேர அரசியல் என்ற சுழலில் எல்லாம்
விஜய் சிக்கிக்கொள்ளவே மாட்டார்.
அதுமட்டுமில்லை. விஜய் இன்று தமிழ் சினிமாவில் மட்டுமே நம்பர் ஒன் இல்லை. தென்னிந்திய சினிமாவிலேயே அவர்தான் தற்போது நம்பர் ஒன் என்ற நிலையில் இருக்கிறார். அவருடைய சக போட்டியாளராக இருந்த மகேஷ்பாபுவின் படங்களின் வசூல்கள் எதுவும் அவருடைய படங்களின் வசூல்களை மிஞ்சவில்லை. தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் தற்போது விஜயின் மார்க்கெட் மிக முக்கியமான நிலையில் இருக்கிறது.
இப்படிப்பட்ட உயரத்தை இன்னும் சில படங்களின் அதிகரிப்பதன் மூலம்,
இந்த உயரத்திலேயே இன்னும் சில ஆண்டுகள் பயணிக்கவே விஜய் விரும்புவார் என்பதில் எந்தவித
மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
அதிகாரம் பாஜகவின் கையில்!
விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையில் சரியான உறவு இல்லை. ஆனால், பாஜகதான் இன்று மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இன்னும் நான்கு வருடங்களுக்கும் அவர்கள்தான் இந்தியாவை ஆட்சி செய்யப்போகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், விஜய் நேரடி அரசியலுக்குள் வந்து, ஆட்சியையே பிடித்துவிடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். ஒன்று. பாஜக எதிர்ப்பு அரசியலை பினராயி விஜயன் மற்றும் மம்தா பானர்ஜி போன்றவர்கள் வழியில் முன்னெடுக்க வேண்டும். அதற்கு மாபெரும் போராட்ட குணமும் தைரியமும் இருக்க வேண்டும். அல்லது பாஜகவை அநுசரித்துப் போக வேண்டும். விஜயை
ஒருவேளை ஆட்சியைப் பிடிக்க முடியாமற்போனாலும் கூட, அடுத்த ஐந்து
வருடங்கள் அவர் அரசியல் செய்ய வேண்டும். ஒருவேளை திமுக ஆட்சியைப் பிடிக்குமானால் அவர்களையே
எதிர்த்து அரசியல் செய்ய வேண்டி வரும்.
இன்னும் இருக்கிறது வயது!
விஜய் இப்போதுதான் 46-ஆம் வயதிலேயே அடியெடுத்து வைக்கப்போகிறார்.
இன்னும் 5 வருடங்கள் கழித்து அவர் தன் 50-ஆம் வயதில் அரசியலில் இறங்கினாலும், அதுவே
அரசியலைப் பொருத்தவரைக்கும் சரியான வயதுதான். கிட்டத்தட்ட 70 வயதில் அரசியலில் அடியெடுத்து
வைக்கும் ரஜினியோடு ஒப்பிடும்போது, விஜய் இன்னும் 5 வருடங்களோ அல்லது 10 வருடங்கள்
கழித்து அரசியலுக்கு வந்தாலும் கூட அது அவருக்கு சரியான வயதுகளாகவே இருக்க முடியும்.
அதனால் உடனடியாக அவர் அரசியலுக்கு நகர்ந்தே தீரவேண்டும் என்ற
நிலைக்குச் செல்லுமளவுக்கு அவருடைய வயது இல்லை. இன்றும் தமிழ் சினிமாவில் அதிவேகமாக
ஆடக்கூடிய அதிரடியாக சண்டையிடக்கூடிய நாயகன் என்றால் இப்போதும் விஜய்தான் இருக்கிறார்.
அந்த அளவுக்கு அவர் இன்னும் துள்ளல் நிறைந்த நாயகனாகவே காணப்படுகிறார். தோற்ற அளவில்
பார்த்தாலும், அவரது இளமை கூடியிருப்பதாகவே பலரும் சொல்கிறார்கள்.
இப்படி எந்த அளவில் பார்த்தாலும், விஜய் 2021 தேர்தலுக்கே களம் காண்பதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை என்பதே உண்மை.




Post a Comment