அன்புமணியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவு செய்திருக்கிறது பாமக தலைமை. ஆனால், இந்த முறை தனது வியூகங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தல்!
2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக – அதிமுக அல்லாமல் மூன்றாவது அணியாக மக்கள் நல கூட்டணி உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு இடையில், பாமகவும் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன், பிரச்சார யுக்திகளிலும் புதுமையை புகுத்தியது. தேர்தல் முடிவுகள், அக்கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கூட கொடுக்காவிட்டாலும், வன்னியர் வாக்குகளை மீண்டும் அறுவடை செய்து தன் பழைய வாக்கு வங்கியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது பாமக.
2019 நாடாளுமன்றத் தேர்தல்
கழகங்களோடு இனிமேல் கூட்டணியே இல்லை என அறிவித்திருந்த பாமக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்ந்தது. இது அக்கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த அதிர்வை ஏற்படுத்தின. பாமகவின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மருத்துவர் ராமதாஸூக்கும் அன்புமணி ராமதாஸூக்கும் எதிராக அரசியல் அரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, பாமக தான் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
எங்கே தோற்றாலும் தர்மபுரியில் அன்புமணி வென்று விடுவார் என்ற பாமகவின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கூட தோல்வியடைந்தது. இப்படியும் நடக்கலாம் என்பதால்தானோ என்னவோ ராமதாஸ் முன்கூட்டியே மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றை நிச்சயம் செய்து வைத்திருந்தார். அதிமுகவும் அடுத்தடுத்த அரசியல் கணக்குகளை மனதில் வைத்து, அந்த பதவியை கொடுத்துவிட்டது. அதன் மூலம் எப்படியோ நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துவிட்டார் அன்புமணி.
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில், இனிமேல் முதல்வர் வேட்பாளராகவெல்லாம் நிற்கமாட்டேன் என தெரிவித்திருந்தார் அன்புமணி. அன்றைய கூட்டணி முடிவுக்காக அவர் அப்படி பேசியிருந்தாலும், இன்றைய நிலையில், பாமக மீண்டும் முதல்வர் நாற்காலியை குறிவைக்கும் வேலைகளில் இறங்கிவிட்டது என்பதே உண்மை. இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணம் என்ன?
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுக்காட்டிவிட்டது திமுக. எதிர்பார்க்கப்பட்ட உட்கட்சிப் பூசல்கள் எதுவுமில்லாமல், அக்கட்சி பலமாக சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. எதிர் தரப்பில் எடப்பாடியோ ரஜினியோ எவர் நின்றாலும், அவர்கள் எதிர்த்து நிற்பது ஸ்டாலின் தான் என்பதும், அவரை முன்னிறுத்தித்தான் அடுத்த சட்டமன்றத் தேர்தல் இயங்கப்போகிறது என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.
அதிமுக முதல்வர் வேட்பாளர்
ஸ்டாலினுக்கு எதிரான பலமான முதல்வர் வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி. அதிமுக, இன்றைய முதல்வர் எடப்பாடியையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்துமா? அல்லது மூன்றாவது ஒருவரை முன்னிறுத்துமா? தெரியவில்லை. சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் சசிகலா முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா? எதுவாக இருந்தாலும், பாஜகவின் உத்தரவை மீறி யாரும் அங்கே ஒன்றும் செய்துவிட முடியாது என்பதே உண்மை.
எடப்பாடியைப் பொருத்தவரை அவர் தன் தலைமையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, கொரோனா விவகாரத்தில் வேகம் காட்டியது என தன் பெயருக்கான நன்மதிப்பை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், டாஸ்மாக் திறப்பு அவர் மீது எதிர்மறை பிம்பத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.
ரஜினி கட்சி வேட்பாளர்
ரஜினியின் 2017 டிசம்பர் 31 அறிவிப்புக்குப் பிறகு, அவரையே ஸ்டாலினுக்கு எதிரான முதல்வர் வேட்பாளராக பாஜகவும் ஊடகங்களும் பார்த்து வந்தன. ஆனால், தன்னைப் பற்றிய எதிர்பார்ப்புகளை எல்லாம் தன் பிப்ரவரி மாத செய்தியாளர் சந்திப்பு மூலம் முறியடித்துப் போட்டுவிட்டார் ரஜினி. அதனால், அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு இப்போது மெல்ல குறைந்துவிட்டது. பாபா பாணியில் இன்னொரு முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தும் அவரது திட்டம், வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், கூட இன்றைய தமிழக அரசியல் சூழலில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. சாத்தியமின்மைக்கு அதுமட்டுமே காரணம் இல்லை.
தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. கொரோனாவால் வேறு சூழ்நிலைகள் எல்லாம் மாறியிருக்கின்றன. செப்டம்பரில் பள்ளிக்கூடங்கள் துவங்குவது போல, ரஜினியின் புதிய கட்சியும் கூட இன்னும் சில மாதங்கள் கழித்துத்தான் தொடங்கப்பட முடியும். செப்டம்பரில் கட்சியை அவர் துவக்கினாலும் எட்டே மாதங்களுக்குள் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு செயலாற்ற வேண்டும். அவர் முன்னிறுத்தப்போகும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதைப் பொருத்தும் மக்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
அன்புமணியை களமிறக்கும் பாமக
தமிழக அரசியலில் திமுகவுக்கு எதிரான தலைமைக்கு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தில் தங்கள் இளம் தலைவர் அன்புமணியை களமிறக்கும் திட்டத்திற்குள் கடந்து வந்திருக்கிறது பாமக.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் உறுதுணை இல்லாமல் இதனை சாதிக்கவே முடியாது அல்லது பாஜகவின் துணை இருந்தால் இதிலே வெல்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை உணர்ந்துவிட்ட பாமக தலைமை, எல்லா வகையிலும் பாஜகவுடன் நெருக்கத்தை கடைபிடித்து வருகிறது.
அதேநேரத்தில், திமுகவை எதிர்க்கும் தகுதியும் பலமும் தங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில், திமுக தலைமையையும் திமுகவையும் கடுமையாக எதிர்த்து வருகிறது அக்கட்சி. இதன்மூலம், திமுக எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்பது அதன் கணக்கு. அதோடு, பாஜகவையும் தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்பது இன்னொரு கணக்கு. இரண்டாம் கணக்கில் வெற்றிபெற்றிருக்கிறது பாமக.
திராவிட இயக்கங்களை வீழ்த்தாமல், முக்கியமாக திராவிட சித்தாந்தத்தை ஓரளவுக்கு இன்னும் கடைபிடித்து வரும் திமுகவை வீழ்த்தாமல், இந்த மண்ணில் தங்களால் கால்பதிக்கவே முடியாது என்பதை அழுத்தமாக உணர்ந்துவிட்ட பாஜக, அதனை தங்களால் நேரடியாக செய்யமுடியாது மாறாக, வேறொரு ஆளுமையைக் கொண்டுதான் செய்ய முடியும் என்ற மனநிலைக்கு எப்போதோ வந்துவிட்டது. பாஜகவின் எதிர்பார்ப்பை தங்களால் பூர்த்தி செய்ய முடியும் என்ற இணக்கத்துடன் இப்போது பாஜக ஆதரவை தங்கள் பக்கம் கொண்டு வந்திருக்கிறது பாமக.
அதிமுகவும் கூட்டணிக்குள்!
இந்த தங்கள் கணக்கில் அதிமுகவும் இருந்தால், அதற்கென்றே இருக்கும் வாக்கு வங்கியை வைத்து வெற்றி நிச்சயப்படும். பெரிய கட்சியான அதிமுக முதல்வர் வேட்பாளரை விட்டுக்கொடுக்காது எனினும், பாஜக தலைமை நினைத்தால், அதிமுக தலைகள் மீதிருக்கும் வழக்குகளை காட்டி அவர்களையும் பணிய வைக்க முடியும். அதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக முதல்வர் வேட்பாளராக அன்புமணியை முன்னிறுத்தும் எல்லா வேலைகளிலும் மும்முரமாக இருக்கிறது பாமக.
பாமகவின் புதிய கணக்கு வெற்றிபெறுகிறதா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.




Post a Comment