Video Categories

10 நாடுகள்! பல்லாயிரக்கணக்கான அணு ஆயுதங்கள்!

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில், ஜப்பானின் ’ஹிரோஷிமா’ மற்றும் ’நாகசாகி’ நகரங்கள் மீதான தாக்குதல்கள் மூலம் அணு ஆயுதங்களையும் அவற்றின் அதிபயங்கர ஆற்றலையும் உலகுக்கு வெளிப்படுத்திய அமெரிக்கா, உலக வல்லரசாக எழுச்சி பெற்றது. அமெரிக்காவின் இந்த விஸ்வரூபம் அதுவரை உலகை ஆதிக்கம் செலுத்திவந்த பிரிட்டன் பேரரசையே பின்னுக்குத் தள்ளியது.

அதிநவீன ஹைட்ரன் ஆயுதங்களுக்கு ’அப்டேட்’ ஆன அமெரிக்கா – ரஷ்யா!


அமெரிக்கா அதோடு நின்றுவிடவில்லை. அணுகுண்டுகளை விட அதிநவீனமானதும் அதிக சக்தி வாய்ந்ததுமான ஹைட்ரஜன் அல்லது தெர்மோ நியூக்ளியர் குண்டுகளை, அதிவேகமாக உருவாக்கத்தொடங்கியது. 1954-ஆம் ஆண்டு, அவைகளை சோதித்தும் பார்த்தது. இவற்றோடு ஒப்பிடும்போது, அதற்குப்பிறகு அமெரிக்கா தயாரித்த, B83 எனும் அதிநவீன ஹைட்ரஜன் குண்டு, 1.2 மெகா டன்கள் ஆற்றல் உடையதாகவும், லிட்டில் பாயை விட 80 மடங்கு அதிக சக்திவாய்ந்ததாகவும் இருந்தது.

அடுத்த வருடமே, சோவியத் ரஷ்யாவிடமிருந்து அதன் முதல் ஹைட்ரஜன் குண்டுகளுக்கான சோதனை நிகழ்வு அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து, 1957-இல் பிரிட்டன், தன் முதல் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நிகழ்த்திக்காட்டியது.

உலகை உலுக்கிய சோவியத் ரஷ்யாவின் ’அணு ஆயுத சோதனை’


அமெரிக்காவின் ஹைட்ரஜன் குண்டுகளையும் மிஞ்சி திகிலூட்டியது, 1961 ல் சோவியத் ரஷ்யாவால் சோதித்துப் பார்க்கப்பட்ட ’த்சார் பாம்பா’ (TZAR BOMBA) எனும் மிகப்பெரிய அணு ஆயுதம். 50 மெகா டன் ஆற்றலுடன் தயாரிக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் குண்டு, ஹிரோஷிமாவை முழுமையாக அழித்த லிட்டில் பாயை விட 3333 மடங்கு அதிக சக்திவாய்ந்ததாக இருந்தது.

இந்த குண்டு சோதித்துப் பார்க்கப்பட்டதன் மூலம், புறப்பட்ட ஒரு காளான் வடிவ புகை மேகமானது, ஏறக்குறைய 130,000 அடி உயரங்கள் வரையிலும் எழும்பிற்று. அது, எவரெஸ்ட் சிகரத்தை விட, நான்கரை மடங்கு மேலான உயரமாக இருந்தது. அதுமட்டுமல்ல. உலகம் முழுமைக்கும் ஒரு முறைக்கு மூன்று முறை அதிர்ச்சி அலைகளை அனுப்பி வைத்தது. இது சோதித்துப் பார்க்கப்பட்டு, சுமார் 57 வருடங்கள் ஆகிவிட்டாலும், இதுவே இன்றுவரை உலகின் மிகப்பெரியதும், மிக சக்தி வாய்ந்ததுமான அணு ஆயுதமாகக் கருதப்படுகிறது.


இரு நாடுகளிடம் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள்!

இன்றைய நிலையில், இப்படிப்பட்ட அதிநவீன ஹைட்ரஜன் குண்டுகள் உள்பட 8000 அணு ஆயுதங்களைத் தன் வசம் வைத்திருக்கும் ரஷ்யா, அணு ஆயுத வல்லரசு நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அணுகுண்டுகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி, பல நாடுகளையும் அணு ஆயுத உற்பத்தி மற்றும் அவற்றிற்கான பல லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகளை நோக்கித் தள்ளிய அமெரிக்கா, 7400 குண்டுகளுடன் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது.

ப்ரான்ஸ், சீனா மற்றும் யு.கே.வின் கையிருப்பு

300 குண்டுகளுடன் 3-ஆம் இடத்தில் இருக்கும் ப்ரான்ஸ் 1968-இல் தன் முதல் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நிகழ்த்தியது. 250 அணுகுண்டுகளுடன் 4-ஆம் இடத்தில் இருக்கும் சீனா, ப்ரான்சிற்கு ஒரு வருடம் முன்னதாகவே தன் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நிகழ்த்திக்காட்டியது. பிரிட்டன் எனப்பட்ட இன்றைய யுனைடட் கிங்டம், 225 குண்டுகளுடன் 5-ஆம் இடத்தில் இருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் நிலை!


100-லிருந்து 120 அணுகுண்டுகள் வரை வைத்திருக்கிற பாகிஸ்தான் 6-ஆம் இடத்திலும், 90-லிருந்து 110 குண்டுகள் வரை வைத்திருக்கிற இந்தியா 7-ஆம் இடத்திலும் இருக்கின்றன. பாகிஸ்தானை விட இந்தியா கொஞ்சம் குறைவான அணுகுண்டுகளை வைத்திருந்தாலும், சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகள் இருப்பதென்னவோ இந்தியாவிடம் தான். 1998-இல் பொக்ரான் எனும் இடத்தில் இந்தியா தன் முதல் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நிகழ்த்தியது. அதன் பொருட்டு பொருளாதாரத் தடைகளையும் சந்தித்தது. இந்தச் சோதனை மூலம், ஹைட்ரஜன் குண்டுகள் வைத்திருக்கும் வெகுசில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்தது.  

இஸ்ரேலுக்கும் இடமுண்டு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மட்டுமே அதிக அணுகுண்டுகள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. 80 குண்டுகளுடன் இந்நாடு பட்டியலில் எட்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. இஸ்ரேலிடத்தில் ஹைட்ரஜன் குண்டுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.


’வாண்டட்’ ஆக வந்து வண்டியில் ஏறும் வடகொரியா!  

சர்ச்சைக்குரிய நாடான வடகொரியா இந்தப் பட்டியலில் 10 குண்டுகள் கையிருப்புடன் 9-ஆம் இடம் பிடித்திருக்கிறது. எத்தனை குண்டுகள் வைத்திருக்கிறது எனத் தெரியவராத ஈரான் 10-ஆம் இடத்தில் இருக்கிறது பட்டியலில்.

தற்போது உலக அளவில் இருக்கும் 16,300 அணு ஆயுதங்களும்,  ரஷ்யா துவங்கி 
வடகொரியா வரையிலாக நாம் பார்த்த 9 நாடுகளிடத்தில் தான் இருக்கின்றன. மீண்டும் ஒரு உலக யுத்தம் வந்தால், அணு ஆயுதங்களை அளவில்லாமல் சேமித்து வைத்திருக்கும் இந்த 10 நாடுகளுடைய பங்களிப்பும் இல்லாமல், அது முற்றுப்பெறாது எனலாம். சரி. இறுதிக்காலத்தில் இப்படி நாடுகள் மத்தியில் அணு ஆயுதப் பயன்பாடுகள் அதிகரித்திருப்பது பற்றி சத்திய வேதம் கொடுக்கும் சாட்சி என்ன? 


Post a Comment

Copyright © NIRUBAN. Designed by OddThemes